நீரா பானம் உற்பத்தியை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகள் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி : 'நீரா பான உற்பத்தியை மேம்படுத்த தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீரா உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது. அதில், 2018ம் ஆண்டு தமிழகத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளான, நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய, தமிழக அரசு அனுமதி அளித்தது.இதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், 24 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு போதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:
நீரா உற்பத்திக்காக துவங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பதிவு செய்யப்பட்டது. அதன்பின், வாரியம் வாயிலாக உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.இதனால், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியை நிறுத்தி விட்டன.தற்போது, கோவையில் மண்டல அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 250 மரங்களிலாவது நீரா உற்பத்திக்கு, ஆரம்ப நிலை உதவியாவது தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக வழங்க வேண்டும்.தென்னை மரத்தில் இருந்து, நீரா பானம் உற்பத்தி செய்தவுடன், ஐஸ்பேக்கில் வைத்து ஐந்து நாட்களுக்கு மட்டுமே பாதுகாக்க முடியும். இதனால், நீரா சர்க்கரை போன்ற உடலுக்கு நன்மை தரும் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், வேளாண் விற்பனை வணிக வரித்துறை வாயிலாக உபகரணங்கள் வாங்க உதவி செய்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. அரசு நீரா பானம் ஏற்றுமதி செய்யும் வகையில், கெட்டுப்போகாமல் இருக்க தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தி தர வேண்டும்.நீரா பானம், தேங்காய் பால் போன்றவற்றை, அரசு நிகழ்ச்சிகள், அதிகாரிகள் கூட்டங்களில் வழங்க நடவடிக்கை எடுத்தால், இதன் பயனை அனைவரும் அறிய முடியும். நீரா பானம் சந்தைப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கி தந்தால், மேலும் உற்பத்தி அதிகரிக்கும். தென்னையை நம்பியுள்ள விவசாயிகள் பயன்பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.