நகை வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி
கோவை : கோவை அவிநாசி ரோட்டில் நகை வியாபாரியிடம், பணம் வழிப்பறி செய்த இருவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை வைசியாள் வீதியை சேர்ந்த விலாஸ் கடம் மகன் அக்சய் கடம், 28. இவர் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். சேலத்தில் இருந்து மொத்தமாக தங்கம் வாங்கி வந்து விற்பனை செய்கிறார். அதற்காக அடிக்கடி கோவையில் இருந்து, சேலத்திற்கு சென்று வருவார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அக்சய் வழக்கம்போல் தங்கம் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். தங்கம் வாங்குவதற்காக, ரூ. 50 லட்சத்து 95 ஆயிரம் பணத்தை தனது பேக்கில் வைத்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் காந்திபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, அக்சய்க்கு ஏற்கனவே பழக்கமான, மகாராஷ்டிராவை சேர்ந்த கிருஷ்ணா படேல், 30, தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் அக்சயை பின்தொடர்ந்துள்ளார். அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே வந்தவுடன், அக்சயின் பேக்கை, பிடித்து இழுத்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து, அவரின் பேக்கை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். அக்சய் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழகக்கு பதிவு செய்து தப்பி ஓடிய, கிருஷ்ணா படேல் மற்றும் அவரின் நண்பரை தேடி வருகின்றனர்.