உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் விவசாயி காயம்

காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் விவசாயி காயம்

பெ.நா.பாளையம் : காட்டுப்பன்றியால் காயம் அடைந்த விவசாயி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ், 58; விவசாயி. இவர் கால்நடை வளர்த்து வருகிறார். இவர் பால் சொசைட்டிக்கு பால் ஊற்றி விட்டு, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது காட்டுப்பன்றி குறுக்கே வந்து விழுந்ததில், கீழே விழுந்த ரங்கராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்வதாக அறிவிப்பு செய்து, இரண்டு மாதம் ஆகியும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. காட்டு பன்றிகளின் தொல்லை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அது பொதுமக்களை தாக்குவதுடன், வேளாண் பயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது. காட்டுப்பன்றி தொல்லைகளுக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காணவில்லை என்றால், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளையும், பொதுமக்களையும், ஒருங்கிணைத்து, விவசாய சங்கமும் இணைந்து வன எல்லையில் காட்டுப்பன்றிகளை கொன்று, நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.இதை வலியுறுத்தி, இம்மாத இறுதிக்குள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, கோவையில் காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !