| ADDED : மே 30, 2024 11:30 PM
அன்னுார்;அன்னுாரில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் கீழ், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில், பள்ளி செல்லாதவர்கள் கண்டறியப்படுவது தொடர்பாக கள ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில், பள்ளி செல்லாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு, தினமும் 2 மணி நேரம் கற்றல் பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வட்டார கல்வி அலுவலகங்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் அன்னுாரில் உள்ள பல்வேறு கிராமங்களில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களால் கடந்த 2ம் தேதி முதல் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில், பள்ளி செல்லாதவர்கள் கண்டறியப்படுவது தொடர்பாக கள ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்வதற்காக, புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட களப்பணி அலுவலர் (மாநில திட்ட இயக்கம்) செல்வக்குமார் சென்னையிலிருந்து நேற்று அன்னுாருக்கு வருகை புரிந்திருந்தார். இந்த கள ஆய்வில் இதுவரை சொக்கம்பாளையம் பகுதியில் 10 கற்போரும், அன்னுார் தெற்கு பள்ளிக்குட்பட்ட குடியிருப்பில் 4 கற்போரும் கண்டறியப்பட்டனர்.அவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் அடிப்படை கல்வி அறிவு தரப்பட்டு, வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் தேர்வு வைத்து தேர்ச்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ----