வாலிபரை வீடு புகுந்து தாக்கிய ஐந்து பேர் கைது
கோவை: சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வாலிபரை, வீடு புகுந்து தாக்கிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். சீரநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 28. இவரை சில நாட்களுக்கு முன் ஒரு அடிதடி வழக்கு ஒன்றில், போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தர்மராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தான், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் என, பிரகாஷ் நினைத்துக்கொண்டார். இதனால், அவர்கள் இருவர் மீதும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை தாக்க திட்டமிட்டார். இதையடுத்து, கடந்த 3ம் தேதி இரவு சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ், திலோதமன், 22, சாய்விக்னேஷ், 28, சக்திவேல், 21 மற்றும் ஜெயகுமார், 21 ஆகியோர் சீரநாயக்கன்பாளையம், வ.உ.சி., வீதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து, கார்த்திக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரும்பு ராடு, கல் உள்ளிட்டவற்றால், கார்த்திக்கை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பினர். காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கார்த்திக் அளித்த புகாரில், ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ், திலோதமன், சாய்விக்னேஷ், சக்திவேல், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.