குடியிருப்புக்குள் வழி தவறி வந்த மானை மீட்ட வனத்துறை
அன்னுார்; குடியிருப்புக்குள் புகுந்த காயமான புள்ளிமானை, வனத்துறையினர் மீட்டு சென்றனர். கணேசபுரம், பகுதியில் நேற்று புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதியில் திரிந்தது. பின்னர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், சுற்றுச்சுவரை தாண்டி எட்டி குதித்தது.மானின் வாய் மற்றும் ஒரு கொம்பில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தபடி இருந்தது. மான் அச்சத்துடன் பள்ளி வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது.இதை பார்த்து, மாணவ, மாணவியர் மிரண்டனர். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கணேசபுரம் கால்நடை மருத்துவர் கனகராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலக வனக்காப்பாளர்கள் சண்முகவேல், மாரிமுத்து மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், ஆண் புள்ளி மானை வனத்துறை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இந்த ஆண் புள்ளி மானுக்கு இரண்டு வயது இருக்கும். காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பிறகு வனப்பகுதியில் விடப்படும்' என்றனர்.