உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தசை சிசைவு நோய்க்கு இலவச பிசியோதெரபி சிகிச்சை!

தசை சிசைவு நோய்க்கு இலவச பிசியோதெரபி சிகிச்சை!

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும், தசைச்சிதைவு நோய்க்கான பகல் நேர பயிற்சி மையத்தில், பிசியோதெரபி சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 2020 டிச.,முதல் தமிழக அரசு சார்பில், கோவை உட்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.இம்மையம், 1,600 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகவும், நவீன இயந்திரங்கள் உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மையத்தில் தற்சமயம், 25 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். மையத்தின் பொறுப்பாளர் மாதையன் கூறியதாவது: தசைச்சிதைவு நோய் என்பது, மரபணு சிக்கல்களால் வரக்கூடிய பாதிப்பு. கருவில் அறிய முடியாது, பிறந்த உடனும் பாதிப்பு ஏற்படும் வரையும், பெரிதாக அறிகுறிகள் இருக்காது. இந்நோயை முழுவதுமாக குணமாக்கும் மருந்துகள் இல்லை. பிசியோதெரபி வாயிலாக, இவர்களின் வாழ்நாளை சற்று நீட்டிக்க இயலும். இது போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க, உறவுகளுக்குள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மையத்தில் மட்டுமின்றி, வீட்டிற்கு சென்றும் பயிற்சி அளிக்கின்றோம். இம்மையத்தில், ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு பயிற்சி இலவசமாக வழங்குவதுடன், வந்து செல்வதற்கு சிறு தொகையும், ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான மருத்துவ பரிசோதனையும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்த நிலையில் உள்ளவர்களும், தசைச்சிதைவு பாதிப்பு இருப்பின் இப்பயிற்சி மையத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கோவையில் அரசு சார்பில் உள்ள, ஒரே தசைச்சிதைவுக்கான ஒரே பயிற்சி மையம் இதுதான். வேலைநாட்களில், காலை, 9:00 முதல் 4:00 மணி வரை, தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 96593 05550/ 63806 05363.

நோய் அறிகுறிகள்

3.5-4 வயதில் நன்றாக நடந்து, ஓடிய குழந்தை தடுமாற்றம் அடைவதே, முதல் அறிகுறி. அடிக்கடி கீழே விழுந்துவிடுவார்கள். முதலில், கெண்டைக்கால் தசை பாதிக்கப்படும். தொடர்ந்து, படிப்படியாக மேல் நோக்கி, பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும். 4 வயதில் தடுமாறுவதும், 5-6 வயதில் நடக்க முடியாமல் உட்கார்ந்துவிடுவதும், 9 -10 வயதில் உட்கார முடியாமல் படுத்து விடுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி