| ADDED : ஏப் 04, 2024 05:51 AM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நிலக்கடலையை தாக்கும் நூற்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு, வேளாண்மை துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலா பூச லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:நிலக்கடலையில், காய்வடு நூர் புழு எனப்படும் காளஹஸ்தி நோய் தாக்குதல் ஏற்படுகிறது.இதனை கட்டுப்படுத்த, எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை பயிரிட வேண்டும். நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்ய வேண்டும். விதை விதைத்து, 25--30 நாட்களுக்குப்பின், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 சதம் குருணை 18.75--25 கிலோவை, ஒரு எக்டருக்கு மண்ணில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு 200 கிலோ ஜிப்சம் எட்டு மண் அணைத்தல் செய்ய வேண்டும். செண்டு மல்லி உள்ளிட்ட பயிர்களைக் கொண்டு, பயிர் சுழற்சி செய்வதினால் நூற்புழுவின் எண்ணிக்கை குறையும். கடுகு பயிரிடுவதினாலும் நூற்புழுக்கள் குறைந்து, கடலையின் விளைச்சல் அதிகரிக்கும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுவே அறிகுறிகள்!
இந்த நோய் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளுத்து, வளர்ச்சி குன்றி காணப்படும். சிறிய பழுப்பு நிற வடுக்கள் முளைகளிலும், வளரும் காய்களிலும் காணப்படும். பாதிப்படைந்த செடியின் விதைகள், கருப்பு நிறத்தில் காணப்படும். தாவரத்தின் வேர் நிறம் மாறி இருக்கும்.