நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை; 559 மரங்கள் வெட்டும் ஏலம் ரத்து
கோவை : அவிநாசி - மேட்டுப்பாளையம் வரை, 559 மரங்கள் வெட்டுவதற்கான ஏலம், கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்தது. வைப்புத்தொகை அதிகமாக வசூலித்ததாக கூறி, மர வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக, மேட்டுப்பாளையம் செல்வதற்கான வழித்தடம் இரு வழியாக இருக்கிறது. இவ்வழித்தடத்தில் வாகன போக்குவரத்து அபரிமிதமாக இருப்பதால், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக, 25.2 கி.மீ.,க்கு துாரத்துக்கு, ரூ.146 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.இப்பகுதியில், 1,342 மரங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. அதில், முதல்கட்டமாக, அன்னுார் உபகோட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில், 159 மரங்கள், சிறுமுகை வனச்சரகத்தில், 123 மரங்கள், மேட்டுப்பாளையம் உபகோட்டத்தில் சிறுமுகை வனச்சரகத்தில், 91 மரங்கள், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், 99 மரங்கள், காரமடை வனச்சரகத்தில் 79 மரங்கள் என, 551 மரங்கள் வெட்டுவதற்கு, டெண்டர் கோரப்பட்டது.இதற்கு வைப்புத்தொகையாக, மரங்களின் மதிப்புக்கு ஈடான தொகை செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 15 பேர் டெண்டர் கோரியுள்ளனர்.டெண்டர் கோரியவர்கள் முன்னிலையில், பொது ஏலம் கோரப்பட்டது. அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மர வியாபாரிகள் கூறுகையில், 'டெண்டர் தொகை யில், 10 சதவீதம் மட்டுமே வைப்புத்தொகை பெறுவது வழக்கம். குறிப்பிட்ட இருவருக்கு சகாயம் செய்வதற்காக, 108 சதவீதத்துக்கு வைப்புத்தொகை செலுத்த அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு அரசாணை இருக்கிறதா என கேட்டதற்கு, நெடுஞ்சாலைத்துறையினரிடம் பதில் இல்லை' என்றனர். மர வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பிரச்னை எழுப்பியதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகியது. இதைத்தொடர்ந்து, மறுதேதி குறிப்பிடாமல் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.
நிர்ணயித்தது எதனால்?
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தியிடம் கேட்டதற்கு, ''டெண்டர் கோருபவர்கள், அதற்கான வைப்புத்தொகையை காசோலையாக வழங்கி, பங்கேற்கலாம். டெண்டர் பெட்டியில், 15 பேர் ஒப்பந்தப்புள்ளி கவர் போட்டிருக்கின்றனர். மரம் வெட்டுபவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென, வைப்புத்தொகை அதிகமாக நிர்ணயித்தோம். 10 சதவீதம் மட்டும் வைப்புத்தொகை நிர்ணயித்தால், ஏலம் எடுப்பவர்கள், மரத்தை வெட்டாமல் ஓடி விடுகிறார்கள். 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களுக்கு பொது ஏலம் கோரியபோது, ரூ.16 லட்சம் வரை சென்றது. தொகை கொடுக்க முடியாதவர்கள், சிண்டிகேட் அமைத்து தகராறு செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால், ஏலத்தை ரத்து செய்து விட்டோம். மீண்டும் ஒரு நாள் ஏலம் விடப்படும். டெண்டர் மற்றும் ஏலம் கோரியவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்னிலையில் ஏலம் கோரப்படும்,'' என்றார்.