சிட்டியை விட்டு நான் போக மாட்டேன்; அடம்பிடித்த ரவுடியின் மனு டிஸ்மிஸ்
கோவை; கோவை மாநகரில் இருந்து வெளியேற, போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ரவுடி தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்றம் 'டிஸ்மிஸ்' செய்தது. கோவை, மாநகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் சிலர், பொது மக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சிலர் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.இதுபோன்ற வரலாற்று பதிவேடு ரவுடிகள் மீது, பொது மக்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். அப்படிப்பட்ட ரவுடிகளை, சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் கீழ், மாநகரில் இருந்து வெளியேற்ற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஜன.,13ம் தேதி, 27 ரவுடிகள், ஆறு மாதங்களுக்கு மாநகரில் இருந்து வெளியேற, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து மேலும், 83 நபர்கள் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்தவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காந்திபுரத்தில், 2020ம் ஆண்டு நடந்த இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலை மற்றும் 2015ம் ஆண்டு சூலுாரில் நடந்த மூவர் கொலை வழக்குகளில் தொடர்புடைய, வரலாற்று பதிவேடு குற்றவாளியான பீளமேடு, ஜெகநாதன் காலனியை சேர்ந்த பசும்பொன் குமார், 42 என்பவர், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்தாக, மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, பசும்பொன் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, போலீசார் தரப்பில் பசும்பொன்னின் வழக்கு விவரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. விளக்கங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பசும்பொன் தாக்கல் செய்த மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது போன்ற 'ஏ பிளஸ்' ரவுடிகளால், மாநகரில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொது மக்களை அச்சுறுத்தி கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால், இது போன்ற ரவுடிகளை மாநகரில் இருந்து வெளியேற்றுவது தான் சரியானது' என்றார்.