கோவை:''ஒரு சென்டிமீட்டர் கூட இடம் விடாமல், கட்டடம் கட்டினால், மழை நீர் எங்கே செல்லும்,'' என, கலெக்டர் கிராந்திகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மழை நீர் சேகரிப்பு கருத்தரங்கு, கோவை மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:கோவையின் சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கிறது. சராசரியாக பெய்யக்கூடிய மழை நமக்கு கிடைக்கிறது. அதேநேரம், கோவை நகரத்துக்கென பெரிய அளவிலான நீர் நிலைகள் இல்லை. நொய்யல் ஆறு இருந்தாலும், பெரிய அளவிலான ஆறாக இல்லை.கோடையில் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டோம். நாளுக்கு நாள் சிறுவாணியில் எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. பெங்களூரு, டில்லியில் தற்போது சந்திக்கும் பிரச்னையை உணர வேண்டும். மழைநீர் கட்டமைப்பு கட்டாயம்
பருவ நிலை மாற்றத்தால், கடந்தாண்டு ஒரே நாளில், 10 செ.மீ., மழை பதிவானது. வெள்ளம் ஏற்பட்டால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது, ரோட்டில் தேங்குவது, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன.மழை நீர் குளங்களுக்கு சென்றடைவதற்கான வடிகாலை, அதிகப்படுத்திக் கொண்டே செல்ல முடியாது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதே தீர்வு. புதிதாக வீடு கட்டும் முன், 'போர்வெல்' போடுகிறோம். அதேபோல், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பும் ஏற்படுத்த வேண்டும்; அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இடம் விடலேன்னா எப்படி?
மழை நீரை சேகரிக்க, பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும். கட்டடங்கள் கட்டும்போது, பக்கத்திறவிடம் பற்றி பேசுகிறோம்; ஆனால், ஒரு சென்டி மீட்டர் கூட இடம் விடாமல் கட்டடம் கட்டினால், மழை நீர் எங்கே செல்லும்.நீங்கள் வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் மழை நீரை, நிலத்துக்குள் இறக்குவதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.முன்னதாக, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கண்காட்சியை, கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் பார்வையிட்டனர்.பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் அதிகாரிகள், மழை நீர் சேகரிப்பு விதம் குறித்து விளக்கினர்.உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கிட்குமார் ஜெயின், நகர பொறியாளர் அன்பழகன், துணை நகர பொறியாளர் கருப்பசாமி, நிர்வாக பொறியாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கட்டமைப்பு கட்டாயம்'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், ''மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மழை நீரை நிலத்துக்குள் அனுப்பினால் நீர் மட்டம் உயரும்; ஆழ்துளை கிணறுகளுக்கும் நீர் வரத்து இருக்கும்.கட்டட வரைபட அனுமதி பெறும்போது, அனைத்து கட்டடங்களுக்கும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மழை நீரை சேமிக்கும் வகையில், மாநகராட்சி பராமரிப்பில் உள்ள குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நரசாம்பதி மற்றும் சின்ன வேடப்பட்டி குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.