பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே தொடர் மழையால், பாலாற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி பாய்கிறது பாலாறு. இந்த ஆறு, திருமூர்த்திமலை, தேவனுார்புதுார், அர்த்தநாரிபாளையம், கம்பாலப்பட்டி, மஞ்சநாயக்கனுார், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. அதன் பின், அது கேரளாவுக்கு செல்கிறது.மழைக்காலங்களில் உருவாகும் காட்டாறுகளிலிருந்து வரும் நீர் தேங்குமிடமாக உள்ள பாலாறு நீரினை எஸ்.நல்லுார், அர்த்தநாரிபாளையம், தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம், ராவணா புரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்காக பாலாற்றில், 10 வட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப் படுகின்றன.இந்த ஆற்றில் நீர் தேங்கினால், சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள விவசாயிகளின் தோட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காமல் இருப்பதுடன், கிணற்றிலும் நீர் ஊரும்.கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவால், ஆற்றுக்கு நீர்வரத்து இருந்ததால் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டது.சில மாதங்களாக கடும் வறட்சியான சூழலால் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, வனப்பகுதிகளில் ஆங்காங்கே சிறு ஓடைகள் போல தண்ணீர் ஊற்றெடுத்து வரத்துவங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம், பாலாற்றில் வழிந்தோட துவங்கியுள்ளது.தண்ணீர் மீண்டும் பாலாற்றை வந்தடைந்துள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.'பாலாற்றில், வெள்ளம் நீர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம், தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஆற்றில் நீர் தேங்கி செல்லும் வகையில், தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.