| ADDED : ஜூன் 20, 2024 05:41 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஏரிப்பட்டி பள்ளியில், வாசிப்பு இயக்கம் துவக்க விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கம்' துவக்க விழா நடந்தது.முதல் நிகழ்வாக, விடுமுறையில் கதை வாசித்து பள்ளி திறந்தவுடன் கதை கூறிய மாணவர்களுக்கு பரிசாக, சிறுகதை நுால் வழங்கப்பட்டது. நுால்களை வழங்கிய கவிஞர் அம்சபிரியாவுக்கு மாணவர்கள் நன்றி கூறினர்.பட்டதாரி ஆசிரியர் கீதா கூறியதாவது:'கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கம்' துவங்கப்பட்டது. வாசிப்பு இயக்கம், 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். வாசிப்பு இயக்கத்தில் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, பொன்மொழிகள், கதைகள், வினாடி - வினாக்கள் நடத்தப்பட்டு, அறிவியல் மனப்பான்மை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாணவர்கள் கதைகளை படித்து திறம்படச் சொல்லி, கதைகளை தானே உருவாக்கும் திறமையை பெரும் வல்லுனர்களாக மாற்ற வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கதை வாசிப்பின் வாயிலாக மாணவர்கள், சரளமாக வாசிப்பதை ஊக்குவிக்க திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடக்கருத்தை தெளிவாக புரிந்து திறம்பட கருத்துக்களை வெளிப்படுத்த கதை வாசிப்பு அவசியமாகும்.கதைகள் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டர்; அவர்களை கதை சொல்லி மாய உலகில் வரச்செய்யலாம். கற்பனை, எழுதுதல், வாசிப்பு மற்றும் புரிதல் திறன் மேலோங்கும். இதன் வாயிலாக படிப்பில் ஆர்வமும், பள்ளியின் வருகைப்பதிவை மேம்படுத்தலாம்.அம்சபிரியா எழுதிய மீனின் ஆசை சிறுகதை நுால் உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.