உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்சிப்பொருளான சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

காட்சிப்பொருளான சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 'சிக்னல்'கள் பயன்பாட்டில் இல்லாமல், வெறும் காட்சிப்பொருளாகவே காணப்படுகிறது.பொள்ளாச்சியில், நாளுக்கு நாள் தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை, குடியிருப்புகள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அதற்கேற்ப நகர கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.நகரப்பகுதியில் உள்ள கடைகளில், 'பார்க்கிங்' வசதியில்லாதது; தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள், நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தம்; ஒரு வழிப்பாதையில் விதிமுறை மீறும் வாகனங்கள் போன்றவற்றால், நெரிசல் நகரமாக காட்சியளிக்கிறது.நெரிசலை கட்டுப்படுத்த ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை, திருவள்ளுவர் திடல், கடைவீதி, தேர்நிலையம், மரப்பேட்டை அருகே ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.மேலும், கோவை ரோட்டில், தியேட்டர் அருகிலும், பல்லடம் ரோடு ஐந்து கார்னர் பகுதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன.புதியதாக அமைக்கப்பட்ட சிக்னல்கள் சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின், அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன.ஒவ்வொரு முறையும் பழுதடைந்த சிக்னல் கம்பங்கள், புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால், பயன்பாட்டுக்கு வருவதில்லை.நெரிசலை தவிர்க்க அமைக்கப்பட்ட சிக்னல்கள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளதால், நகரப்பகுதியில் நெரிசல் பிரச்னை தீர்க்க முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

விளம்பரம் வைக்கவா?

பொள்ளாச்சி பகுதியில் சிக்னல்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவதில்லை. அதற்கு, மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், அதற்கு மாற்றாக போலீசார் நின்று, போக்குவரத்தை சீர்படுத்துகின்றனர்.பயன்பாடு இல்லாத சிக்னல்கள், தற்போது விளம்பர பதாகைகள் தொங்கவிடும் இடமாக மாறியுள்ளன. அவை உயரமாக செல்லும் வாகனங்களில் சிக்கி கொள்வது தொடர்கிறது.மேலும், கம்பத்தின் எடைக்கு ஏற்ப இல்லாமல், விளம்பர பதாகைகள் அதிக எடையுடன் அமைத்தால், கம்பமும், பலகையுடன் சேர்ந்து ஆடுகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நடவடிக்கை தேவை

அரசு உரிய கவனம் செலுத்தி, நெரிசலை தவிர்க்க புதுப்பிக்கப்பட்ட சிக்னல்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை போலீசார், மற்ற துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ