கிருஷ்ண ஜெயந்தி விழா: சிறுவர், சிறுமியர் உற்சாகம்
கருமத்தம்பட்டி:கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து உற்சாகமடைந்தனர்.கருமத்தம்பட்டி அடுத்த வினோபா நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ராஜ கணபதி கோவிலில், கிருஷ்ணருக்கு வழிபாடுகள் செய்யப்பட்டன.தொடர்ந்து, சிறுவர், சிறுமியர் நடனமாடி அனைவரின் பாராட்டுதல்களை பெற்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இளைஞர்கள் செய்திருந்தனர். தேவராயன்பாளையத்தில், ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணர் வேடமணிந்து குழந்தைகள் உறியடித்து விளையாடினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெ.நா.பாளையம்
துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி உறியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.விழாவை ஒட்டி கணபதி ஹோமம், அபிஷேக பூஜை, செண்டை மேளம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான உறியடி விழாவில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 60 அடி உயரம் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஆர்வமாக ஏறினர். மூணு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வழுக்கு மரத்தில் முழுமையாக ஏறி, பரிசு பொருட்களை தட்டிச் சென்றார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், பரம்பரை தர்மகர்த்தா, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.