உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த மின்னழுத்தம்; விவசாயிகள் அவதி

குறைந்த மின்னழுத்தம்; விவசாயிகள் அவதி

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் இருந்ததால், விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் தென்னை, வாழை மற்றும் பிற வகை பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு, சொலவம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள எஸ்.எஸ் -2, டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த ரோட்டில் அமைந்துள்ள தனியார் கல்லுாரி கட்டட பணிகளுக்காக இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய பகுதிகளுக்கு மும்முனை மின் வினியோகம் செய்யும் போது, குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மோட்டர் சரிவர இயங்குவதில்லை; விவசாயத்துக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடியாமல் போகிறது.மேலும், இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து ஒரு லைனில், மின்சாரம் அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருவதால், தோப்புகளில் உள்ள பல்புகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இதர மின் சாதனங்கள் பழுதடைகிறது. இதனால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விளை பயிர்களும் பாதிக்கப்படுகிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தனியார் கல்லுாரிக்கு முறையாகவே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்பகுதியில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து சரி செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !