| ADDED : ஆக 01, 2024 12:58 AM
பெ.நா.பாளையம் : வேளாண்மையில் மண் அரிமானத்தை தடுக்கும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.விவசாய நிலங்களில் உழவு செய்யும் போது, சரிவிற்கு குறுக்கே உழவு செய்தல் நல்லது. இதனால், மழைநீர் ஆங்காங்கே சால்களில் தேங்கி நின்று, மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடையும். இம்முறையில் கூடுதல் செலவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். பல இடங்களில் உழவர்கள் நில சரிவிற்கு இணையாக உழவு செய்து, அதிக மண்ணரிப்பு மற்றும் மழைநீர் அடித்து செல்லுதல் ஆகியவற்றுக்கு ஆளாகி மண்வளத்தை இழக்கின்றனர். இதை தவிர்ப்பதால், உறுதியான பயிறு வளர்ச்சிக்கு வழி ஏற்படும். விளைச்சலும் அதிகரிக்கும்.சாலிற்கு குறுக்கே ஆங்காங்கே அரை அடி முதல் முக்கால் அடி பருமன் உள்ள வகையில் சிறு, சிறு வரப்புகள் அமைப்பதால், நிலத்திலிருந்து மண் மற்றும் மழைநீர் அடித்துச் செல்வது தடுக்கப்படுவதுடன், நிலத்தின் ஈரப்பதம் அதிகரிக்கவும் வழி ஏற்படுகிறது.மேலும், நிலச்சரிவு, 0.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலங்களில் வரிசை விதைப்பு செய்திருந்தால், பயிர் விதைத்த, 30 முதல், 35 நாட்களில் வரிசைகளுக்கு இடையே கலப்பையைக் கொண்டு சால் அமைப்பதன் வாயிலாக, மழை நீரை தேங்கச் செய்து மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்க முடியும் என, வேளாண் துறையினர் கூறினர்.