உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி வாசல்களில் மிலாடி நபி விழா

பள்ளி வாசல்களில் மிலாடி நபி விழா

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களில், மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை மற்றும் அன்னதானம் நடந்தது.இஸ்லாமிய மதத்தின் இறுதி இறை துாதராக கருதப்படும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான, ரபி--அல்- அவ்வலில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.அதன்படி, மிலாடி நபியான நேற்று, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி பள்ளிவாசல்களில், நபிகளின் அறிவுரைகள், பொன்மொழிகளை நினைவு கூர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது.காலையில், 'மவுலித் ஷரிப்' எனப்படும் சிறப்பு ஓதலை தொடர்ந்து, மதியம் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனுார், மஸ்ஜிதில் மதீனா பள்ளிவாசலில் மிலாடிநபி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மவுலவி தமீமுல் அன்சாரி ஜைனி ஹஜ்ரத், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை விளக்கிப் பேசினார்.விழாவில், ஹாஜி அப்பாஸ், மவுலவி பாருக்அப்துல்லா கைரி, ஹாஜி சம்சுதீன் மற்றும் கோவிந்தனுார் ஜமாஅத்ததார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அனைவருக்கும் கந்துாரி உணவு வழங்கப்பட்டது.* வால்பாறையில் நடந்த மிலாடி நபி விழா, ஆனைமலை ஹில்ஸ் முஸ்லீம் ஜாமாத் சார்பில், மூத்தவல்லி பூங்கோயாதங்கள் தலைமையில் நடந்தது. மூத்தவல்லி கமாலுதீன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு தலைவர் குஞ்ஞாலி, செயலாளர் யூசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு தொழுகைக்கு பின் இஸ்லாமியர் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். அன்னதானத்தை கவுரவ தலைவர் அமீது துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ