அவினாசிலிங்கம் அய்யா நினைவு கப் வென்றது நிர்மலா மகளிர் கல்லுாரி அணி
கோவை:அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த, மாநில அளவிலான கையுந்து பந்து போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரி கோப்பையை வென்றது.அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன விளையாட்டு மைதானத்தில் 'அவினாசிலிங்கம் அய்யா' நான்காவது நினைவுக் கோப்பைக்கான கையுந்து பந்து போட்டி நடந்தது. மாநில அளவிலான இப்போட்டியில், 10 கல்வி நிறுவனங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவன பதிவாளர் இந்து, போட்டிகளை துவக்கிவைத்து பேசுகையில், ''விளையாட்டு என்பது உற்சாகத்தையும், மன எழுச்சியையும் தரக்கூடியது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய விளையாட்டினை, அனைவரும் பயிற்சியின் அடிப்படையில் மேற்கொண்டால் பயன்பெறலாம்,'' என்றார்.இதையடுத்து நடந்த போட்டிகளில், பாரதியார் பல்கலை, நிர்மலா மகளிர் கல்லுாரி, கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரி, கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் ஆகிய ஐந்து அணிகள், 'லீக்' சுற்றுக்கு தகுதி பெற்றன.இதில், முதல் பரிசு பெற்ற நிர்மலா மகளிர் கல்லுாரிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், இரண்டாம் பரிசு பெற்ற கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரிக்கு ரூ.7,000, மூன்றாம் பரிசு பெற்ற பாரதியார் பல்கலைக்கு ரூ.5,000, நான்காம் பரிசு பெற்ற அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்துக்கு, ரூ.2,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.