அன்னுார்:செயல் அலுவலர் இல்லாமல், நான்கு மாதங்களாக அன்னுார் பேரூராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. அன்னுார் சிறப்பு நிலை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 9,888 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். 5,662 குடிநீர் இணைப்புதாரர்கள் உள்ளனர். சொத்து வரியாக மட்டும், ஆண்டுக்கு ஒரு கோடியே 74 லட்சம் ரூபாயும், குடிநீர் கட்டணம், தொழில்வரி இதர வரியினங்கள் என, மொத்தம் மூன்று கோடி ரூபாய் வருவாயும் வருகிறது.இத்துடன் பல்வேறு அரசு திட்டங்கள், எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றில், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கிறது.இங்கு செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த மோகனரங்கன், கடந்த ஜனவரியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில், புதிய செயல் அலுவலர் இதுவரை நியமிக்கப்படவில்லை.மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ் கூடுதல் பொறுப்பாக அன்னூர் பேரூராட்சியை நிர்வகித்து வருகிறார். பணிகள் மந்தம்
பொதுமக்கள் கூறியதாவது: அதிக வருவாயும், மக்கள் தொகையும் கொண்ட அன்னுார் பேரூராட்சிக்கு, முழு நேர செயல் அலுவலர் நான்கு மாதங்களாக இல்லை. ஐந்தரை கோடி ரூபாயில், வார சந்தையில் கட்டப்பட்ட 56 கடைகளில் 28 கடைகள் மட்டுமே கடந்த பிப்ரவரியில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மீதி 28 கடைகள் வாடகைக்கு விடப்படாமல், அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.பேரூராட்சியில் உப்புத்தன்மை அதிகம் உள்ள குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் இல்லாததால் இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேரூராட்சியில் தினமும், 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, உரம் தயாரிக்க உரிய நடவடிக்கை இல்லாததால், குளம் மற்றும் ரோட்டோர பள்ளங்களில் கொட்டப்பட்டு வருகிறது. பேரூராட்சியில் பல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அன்னுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, குளக்கரையில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாயில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த பிப்ரவரியில் பணி உத்தரவு வழங்கப்பட்டது. அங்கு ஜல்லி கற்கள் பரப்பி, 50 நாட்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு எந்த பணியும் நடக்காமல் முடங்கி கிடக்கிறது.எனவே, இந்த பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் அன்னூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.