இனி, பாதாள சாக்கடைக்கு கட்டாய வசூல் கூடாது! கான்ட்ராக்டர்களுக்கு செக் வைத்த கவுன்சிலர்
கோவை : கோவை மாநகராட்சி, 97வது வார்டில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க அதிகமான தொகை வசூலிப்பதாக புகார் எழுந்தது. வசூலில் ஈடுபட்ட சப்-கான்ட்ராக்டர்களை அழைத்த, வார்டு கவுன்சிலர் உதயகுமார், 'இனி, யாரேனும் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்ததோடு, அவர்களிடம் உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கினார்.கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 85, 94, 96, 97, 98, 99, 100 ஆகிய வார்டுகளில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு, வீட்டு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பணியை எல் அண்டு டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து, சப்-கான்ட்ராக்டர்கள் நியமித்திருக்கிறது. வீட்டில் இருந்து வரும் செப்டிக் டேங்க் குழாயை, பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணியை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். ஆனால், சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரையும் பாதாள சாக்கடையில் இணைத்து தருகிறோம் என கூறி, பெரிய தொகையை, பொதுமக்களிடம் இருந்து சப்-கான்ட்ராக்டர்கள் வசூலித்து வருகின்றனர். இது, மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.இத்தகவல் அறிந்த, 97வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) உதயகுமார், எல் அண்டு டி நிறுவன அதிகாரிகள், சப்-கான்ட்ராக்ட் எடுத்துள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேற்று தனது வீட்டுக்கு அழைத்து கூட்டம் நடத்தினார். அப்போது, 'எக்காரணம் கொண்டும், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது' என, எச்சரிக்கை விடுத்தார். 'இனி, ஒப்பந்தப்படி, பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்; இதர பணிகள் செய்வதாக கூறி பணம் வாங்க மாட்டோம். மீறி செயல்பட்டால், எடுக்கப்படும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறோம்' என, சப்-கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனங்களை சேர்ந்த ஒன்பது பேரும் உறுதிமொழி கடிதம் எழுதி, கையெழுத்திட்டு, கவுன்சிலரிடம் வழங்கியுள்ளனர்.இதுகுறித்து, கவுன்சிலர் உதயகுமார் கூறுகையில், ''செப்டிங் டேங்க் அமைவிடத்தில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பணம் கொடுக்க தேவையில்லை. சமையலறை, குளியலறை கழிவுகளை வெளியேற்ற செய்யும் இதர வேலைகளை, வீட்டின் உரிமையாளர்கள் சொந்தமாக ஆட்கள் நியமித்து, நியாயமான கட்டணத்தில் செய்துகொள்ள வேண்டும்,'' என்றார்.
களமிறங்கணும்
கோவை மாநகராட்சியில் சில இடங்களில், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள பகுதிகளில் இனி நடைபெற இருக்கிறது.அதனால், ஒவ்வொரு வார்டிலும் அந்தந்த ஒப்பந்ததாரர்களை கவுன்சிலர் அழைத்து பேசி, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினால் கட்டாய வசூல் நடக்காது என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு. இல்லையெனில், மாநகராட்சி உத்தரவு என தவறாக நினைத்து, கூடுதல் தொகை செலுத்தி, ஏமாறுகின்றனர்.