உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்து நடக்காத நாளே இல்லை! தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

வாகன விபத்து நடக்காத நாளே இல்லை! தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

பொள்ளாச்சி : விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோடு விரிவாக்கம் செய்வாங்க... ஆனால், பொள்ளாச்சியில் உடுமலை ரோடு விரிவாக்கம் செய்த பிறகே விபத்து அதிகமாக நடக்கிறது.பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை போக்குவரத்து வசதிக்காக கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், 24 கோடியே, 77 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.விபத்துகளை தவிர்க்க இந்த ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டதாக கூறினாலும், உண்மையில், இந்த ரோடு விபத்து நடக்கும் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பு, குறுகலான சர்வீஸ் ரோடு, பிரதான பாதையும் அகலமில்லை, என ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவுகின்றன.

விபத்துக்கு அச்சாரம்

இந்த ரோட்டில் சென்டர் மீடியனில் இருந்த கம்பிகள் பெயர்ந்து, விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. இதை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. தற்போது, சென்டர் மீடியனில் உள்ள கம்பியில் வாகனங்கள் அவ்வப்போது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடு மோசமாக உள்ளன. ரோட்டின் இருபுறமும், சென்டர் மீடியனிலும் காடு போல புதர் வளர்ந்து காணப்படுகிறது.இந்த ரோடு மிகவும் உருக்குலைந்துள்ளதால், விபத்துகள் ஏற்படுத்துகிறது. மேலும், பயன்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்துமிடமாக சர்வீஸ் ரோடு மாறியுள்ளது. வாகனங்கள் பயணிக்க லாயக்கற்றதாகவும் உள்ளது.வேகமாக வரும் வாகனங்கள், ரோட்டிலுள்ள குழிகளால் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன. ரோட்டை சீரமைக்காமல், பெயரளவில் 'பேட்ச் ஒர்க்' மட்டுமே நடக்கிறது.நடைபாதை முழுவதும் புதர் சூழ்ந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரோட்டின் ஓரம் குப்பை கொட்டுமிடமாக மாறி சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. நடைபாதை முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளதுடன், இருக்கும் நடைபாதை பராமரிப்பின்றி உள்ளதால், மக்கள் ரோட்டிலேயே நடந்து செல்கின்றனர்.

விடியல் பிறக்குமா?

இரண்டு ஆண்டுக்கு முன் நடந்த கூட்டத்தில், சின்னாம்பாளையம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அப்போதைக்கு உறுதியளிக்கப்பட்டது. அதன்பின், எவ்விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் இல்லை.

விரைந்து முடிவெடுங்க!

சென்டர் மீடியனில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள கம்பிகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, குறுகலாக உள்ள சர்வீஸ் ரோட்டை விரிவுப்படுத்த வேண்டும். சர்வீஸ் ரோடு, பிரதான ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும்.புதர்கள் மண்டியுள்ள சென்டர் மீடியனை துாய்மைப்படுத்த வேண்டும்.விபத்துக்களை தடுக்க, ஒளிபிரதிபலிப்பான் மற்றும் ரோடு திரும்பும் பகுதியில், 'மஞ்சள்' நிற பிரதிபலிக்கும் சோலார் சிக்னல்கள் அமைக்க வேண்டும். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தால், பயணம் இனிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ