| ADDED : ஆக 22, 2024 02:18 AM
அன்னுார : 'ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை' என பொகலூர் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பொகலூர் ஊராட்சி அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சித் தலைவர் நடராஜனிடம் சரமாரியாக புகார் தெரிவித்து பேசுகையில், 'அத்திக்கடவு திட்டத்தில் சோதனை ஓட்டம் துவங்கி 18 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை ஒரு சொட்டு நீர் கூட எந்த குட்டைக்கும் வரவில்லை. அருகில் உள்ள வடவள்ளி ஊராட்சியில் குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வருகிறது. ஆனால் நம் ஊராட்சிக்கு மட்டும் ஏன் வரவில்லை. ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது,' என்றனர்.ஊராட்சித் தலைவர் நடராஜன் பதிலளிக்கையில், பொகலூர் ஊராட்சியில், ஐந்து குட்டைகளிலும் இதுவரை சோதனை ஓட்டத்திலும், அதன் பிறகும் நீர் வரவில்லை. இதுகுறித்து அன்னுாரில் உள்ள அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர்களிடமும், அவிநாசியில் உள்ள தலைமை அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்துள்ளோம்.'தண்ணீர் அழுத்தம் குறைவாக வருகிறது. அழுத்தம் அதிகமாக வரும் போது, உங்கள் ஊராட்சியில் உள்ள குட்டைகளுக்கு தண்ணீர் கண்டிப்பாக வரும்' என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து முயற்சி செய்து வwருகிறோம்,' என சமாதானம் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.