அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உத்தரவு
பெ.நா.பாளையம்; நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே தொடங்கி, மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்படி, 5 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வியை நிறைவு செய்யும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை, அந்தந்த பகுதி கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.மேலும், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த, வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும், தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள், விளம்பர பேனர்கள் ஆங்காங்கே அமைத்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தவும், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.