| ADDED : ஆக 06, 2024 11:10 PM
கோவை : தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், பென்சனர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைய வலியுறுத்தி, நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அரசு பென்சனர்களுக்கு, மருத்துவ காப்பீட்டுத்திட்டம் நடைமுறையில் உள்ளது. மாதந்தோறும் 497 ரூபாய் பென்சனிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.பென்சனர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கு கிளைம் வழங்காமல் மறுப்பதோடு, ரசீதுகளை வைத்து கிளைம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர்.ஆனால் கிளைம் எச்சூழலிலும் செய்து கொடுப்பதில்லை. அப்படியே செய்தாலும் 30 சதவீதத்தொகை மட்டுமே வழங்குகின்றனர். இதனால் பென்சனர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர்.அதனால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள, குறைகளை களைய வலியுறுத்தி, நேற்று பென்சனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் மதன் தலைமை வகித்தார். செயலாளர் அருணகிரி முன்னிலை வகித்தார். திரளான பென்சனர்கள் பங்கேற்றனர்.