| ADDED : மே 22, 2024 01:10 AM
கோவை:சிட்கோ தொழிற்பேட்டைக்கு அருகே உள்ள நிலக்கரி தொழிற்சாலையிலிருந்து வெளியேறும், கரி மாசு துகள்கள், அப்பகுதி குடியிருப்புகளில் படிந்து, மக்களை கடும் அவதிக்குள்ளாக்குகிறது.கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ ஸ்ரீ சாய்நகர் அருகே பல ஆண்டுகளாக, குடியிருப்பு பகுதிகளை மாசடைய செய்யும், திறந்தவெளி நிலக்கரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.ஸ்ரீ சாய்நகர் மக்கள் நல மன்ற நிர்வாகிகள், முறையிட்டதன் அடிப்படையில் அத்தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்தும், எந்த தீர்வும் இல்லை.அங்குள்ள குடியிருப்பு பகுதியை, மாசுகட்டுப்பாடு மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்தால், நிலக்கரி துாசு ஏற்படுத்தும் சிரமங்களையும், பாதிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.இப்பகுதியை சேர்ந்த ரத்தோர் என்பவர் கூறுகையில், ''வீடுகளின் மாடியில் வைக்கப்பட்டுள்ள, சூரியஒளி மின் தகடுகளின் மீது, கரி துாசி துகள்கள் பறந்து வந்து படர்ந்து விடுகிறது. இதனால், சூரியஒளி மின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது,'' என்றார்.நிலக்கரி தொழிற்சாலையை நிரந்தரமாக மூட, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.