உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி, கல்லுாரி மாணவியரை பாதுகாக்கும் போலீஸ் அக்கா! 71 கல்லுாரிகளில் 37 அக்காக்கள் நியமனம்

பள்ளி, கல்லுாரி மாணவியரை பாதுகாக்கும் போலீஸ் அக்கா! 71 கல்லுாரிகளில் 37 அக்காக்கள் நியமனம்

கோவை : கோவை மாநகர போலீசாரின் 'போலீஸ் அக்கா' திட்டம் மூலம், மாணவியரின் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. மாநகரில் உள்ள 71 கல்லுாரிகளுக்கு, மொத்தம் 37 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி, கல்லுாரி, அலுவலகம், விளையாட்டு மைதானம், மருத்துவமனை என இடங்கள் மாறுபட்டாலும், பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகள், துன்புறுத்தல்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பதுதான் நிதர்சனம். பல இடங்களில் பெண்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மிரட்டலுக்கு அச்சப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இதில், பள்ளி, கல்லுாரி மாணவியரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் கனவு திட்டமான, 'போலீஸ் அக்கா' திட்டம், 2022ம் ஆண்டு ஆக., மாதம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.இத்திட்டத்தில், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் பெண் போலீசார், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கல்லுாரிகளில், 'போலீஸ் அக்கா' ஆக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில் உள்ள 71 கல்லுாரிகளுக்கு, மொத்தம் 37 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கல்லூரிகளுக்கு சென்று, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மாணவியர் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டால், தயக்கமின்றி அவர்களிடம் சொல்லவும் அறிவுறுத்துகின்றனர். இத்திட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், 'போலீஸ் அக்கா'வுக்கு அழைப்புகள் வருகின்றன. கிராமங்களில் இருந்து கல்லுாரிகளுக்கு வரும், முதல் தலைமுறை பட்டதாரிகள் முதல் பல தரப்பான மாணவியருக்கும், இத்திட்டம் உதவியாக உள்ளது.கோவை கமிஷனரின் இந்த மகத்தான திட்டம், தமிழக தலைமை செயலரை கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை!

நடவடிக்கை எப்படி?

பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்படுகிறது. காதல் விவகாரத்தில் பெண்ணை மிரட்டுவது, ஆன்லைன் வாயிலாக வரும் மிரட்டல்கள், இணைய வழியில் பணம் பறிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. மொபைல்போனில் படம் எடுத்து மிரட்டும் நபர்களை அழைத்து, அவர்களின் போனில் உள்ள 'டேட்டா' அனைத்தையும் அழித்து, எச்சரித்து அனுப்பப்படுவதாக 'போலீஸ் அக்கா' ஒருவர் தெரிவித்தார். மேலும், தொலைந்த போன், பணம் உள்ளிட்டவை போலீஸ் அக்கா உதவியுடன் கண்டுபிடித்து தரப்பட்டுள்ளது.

ஒன்பது எப்.ஐ.ஆர்.,

பெண்களின் புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களில் இருந்து எடுத்து 'மார்பிங்' செய்து தவறாக இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என மிரட்டிய நபர்கள், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் என, ஒன்பது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 'போலீஸ் அக்கா'

போலீஸ் அக்கா திட்டத்தின் வாயிலாக கல்லுாரி மாணவியரின் பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படுகிறது. சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த, தலைமை செயலர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார். கோவையில் இத்திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக, அனைத்து கல்லுாரிகளிலும், 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்த விவரங்கள், போலீஸ் தொடர்பாளரின் மொபைல் எண் உள்ளிட்டவற்றை மாணவியர் தெரிந்துகொள்ளும் வகையில், 'கியூ.ஆர்., கோடு' அடங்கிய விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
செப் 05, 2024 15:37

அதுசரி 37 க்கு யார் பாதுகாப்பு கொடுப்பது... தேவை இல்லாத வேலை கல்வி நிலையங்களை இழுத்து மூடிவிடுங்கள்..


Ram pollachi
செப் 05, 2024 15:34

அன்புள்ள போலீஸ் அக்கா பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு நல்ல ஆலோசனை செய்யுங்கள்! பள்ளி கல்லூரி போகும் போது பேருந்து மற்றும் பேருந்து நிறுத்தத்தில் யார் கூட அரட்டை கச்சேரி, தேவை இல்லாமல் கண்ட பையன் கூட இரு, நான்கு சக்கரத்தில் ஊரை சுற்றி ஒரு கடை விடாமல் கண்டபடி தின்று மென்று... பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது... ஒரே அறையில் ஒன்றாக தங்கி அக்கம் பக்கம் எல்லாம் நாற வைப்பது ... இதை எல்லாம் செய்து விட்டு பிறகு பாலியல் வழக்கு போடுங்க என்றால் உங்களால் என்ன செய்ய முடியும்?


புதிய வீடியோ