உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய மேயர் தேர்தல் அரசிதழில் வெளியீடு மொபைல்போன், பேனா கொண்டு வரத் தடை

புதிய மேயர் தேர்தல் அரசிதழில் வெளியீடு மொபைல்போன், பேனா கொண்டு வரத் தடை

கோவை:கோவை மாநகராட்சிக்கான ஆறாவது மேயர் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல், ஆக., 6ல் விக்டோரியா ஹாலில் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியின் மேயர் தி.மு.க.,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, கடந்த 3ம் தேதி மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார்.புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடத்த, கலெக்டருக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியது. அதன்படி, ஆக., 6ம் தேதி காலை, 10:30 மணிக்கு, விக்டோரியா ஹாலில் மறைமுகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செல்வசுரபியை, கலெக்டர் கிராந்திகுமார் நியமித்திருக்கிறார்.'தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவாக, காவல்துறை மூலமாக பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்; 'சிசி டிவி' கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்.பதவியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசிதழில் சரிபார்த்து, தேர்தல் அறிவிப்பில் வெளியிட வேண்டும்; தவறு ஏற்பட்டால், தேர்தல் நடத்தும் அலுவலரே பொறுப்பு. தேர்தல் நடத்துவதற்கான கையேடு, நகர்ப்புற உள்ளாட்சி சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி விதிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் நன்கு படித்தறிந்து, மறைமுகத் தேர்தல் கூட்டத்தை, சட்ட விதிகளின் படி நடத்த வேண்டும். கோரம் கணக்கிடும்போது, பாதிக்கு மேல் கவுன்சிலர்கள் வந்திருக்க வேண்டும்.தேர்தல் நடத்தும் அலுவலரை தவிர, மற்றவர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்லக் கூடாது. ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள், உபகரணங்கள் (பேனா உட்பட) அரங்கிற்குள் எவரும் எடுத்துச் செல்லக்கூடாது. இதை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இத்தேர்தல் தொடர்பாக தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய மேயர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு, அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது. மன்ற கூட்டத்துக்கு வந்திருந்த கவுன்சிலர்களுக்கு நேரில் அறிவிக்கை வழங்கப்பட்டது.

யாருக்கு வாய்ப்பு...யாருக்கு செல்வாக்கு?

வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மேயரின் செயல்பாடு இருக்க வேண்டும். ஏனெனில், கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகள், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, சூலுார் ஆகிய மூன்று தொகுதிகளில் சில பகுதிகள், மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன. அதனால், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு, 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். அதனால், மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதில் கட்சி மேலிட தலைவர்கள் பொறுமையாக இருக்கின்றனர்.மேயர் பதவியை கைப்பற்ற மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பலரும் முயற்சிக்கின்றனர். நகராட்சித்துறை அமைச்சரான நேரு, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, கோவை லோக்சபா தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பரிந்துரைக்கும் கவுன்சிலர்களில் ஒருவர், மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. எந்த அமைச்சருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது, மேயர் தேர்வில் தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ