| ADDED : ஜூலை 17, 2024 11:42 PM
அன்னூர் : 'தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும்,' என தமிழ்ச்சங்க விழாவில் தெரிவிக்கப்பட்டது. கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் மற்றும் பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரி சார்பில், தமிழ் மன்ற துவக்க விழா மற்றும் இலக்கிய சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் நடந்தது. சங்க பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்றார்.கல்லூரி தமிழ் துறை தலைவர் முத்துமணி பேசுகையில், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் யார் ஒருவர் முன்னெடுத்து செல்கிறாரோ அவரே, அந்த சமூகத்தின் வழிகாட்டி ஆவார். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும், என்றார்.'படித்ததில் பிடித்தது' என்ற தலைப்பில் தெய்வசிகாமணியும், 'அறிவோம் ஒரு அரிய செய்தி' என்ற தலைப்பில், தர்மலிங்கமும் பேசினர்.'செருவந்த போழ்தில் சிறை செய்யா' என்னும் தலைப்பில் புலவர் குழந்தைசாமி பேசுகையில், ஆங்கிலமும், பிற மொழி கலப்பும் இல்லாமல் பேசுவது தான், நாம் நம் தாய் மொழிக்கு செய்யும் தொண்டு. அழகு தமிழில் பெயர்கள் சூட்ட வேண்டும். ஒழுக்கமும் கட்டுப்பாடும் எங்கு இருக்கிறதோ, அங்கு கல்வி கலைமகள் குடியிருப்பாள், என்றார்.ஜூன் மாதம் பிறந்த தமிழ் அறிஞர்கள், பாவலர், நாவலர், இரட்டைமலை சீனிவாசன், குன்றக்குடி அடிகளார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஆகியோர் குறித்து தமிழ் ஆசிரியர்கள் பேசினர்.புலவர் சந்திரகலா தலைமையில் கவியரங்கம் நடந்தது. சான்றோர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.