உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திட்டப் பணியால் உடைபடும் குடிநீர் குழாய் முன்கூட்டி தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

திட்டப் பணியால் உடைபடும் குடிநீர் குழாய் முன்கூட்டி தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

பொள்ளாச்சி:கிராமங்கள் ஒட்டி செல்லும் நெடுஞ்சாலையில், ஏதேனும் திட்டப் பணிகள் மேற்கொள்ளும் போது, முன்கூட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஆணையாளர் சுபா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.தொடர்ந்து, கவுன்சிலர்கள் பேசியதாவது: ஆவலப்பம்பட்டியில் இருந்து சுற்றுப்பகுதி ஜோத்தம்பட்டி, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மோசமாக இருப்பதால், சீரமைக்க வேண்டும்.அதேபோல, ஜோத்தம்பட்டி கிராமத்துக்கு கடந்த 30 நாட்களாக அம்பராம்பாளையம் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், மக்கள் பாதிக்கின்றனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.இதேபோல, கிராமங்கள் ஒட்டி செல்லும் நெடுஞ்சாலையில் ஏதேனும் திட்டப் பணிகள் மேற்கொள்ளும் போது, குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, முன்கூட்டியே ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அப்போது, உரிய பணியாளர்களை கண்காணிப்பாளராக நிறுத்தி, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளலாம்.மேலும், கிராமங்களில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர். அப்போது, வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தசாலினி பேசுகையில், ''ஊராட்சிகளில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் தேக்கமடைந்து நிற்பதைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். புரவிபாளையம், ராமபட்டினம், நெகமம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று பெறும் அளவிற்கு, மேம்படுத்தப்படும்,'' என்றார்.கூட்டத்தில், கிராமங்களில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல், டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குதல் என, 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை