கலவை சாதத்துடன் சட்னி வழங்கலாம் அரசுக்கு கோரிக்கை
பொள்ளாச்சி;அரசு பள்ளிகளில், மதியம் வழங்கப்படும் கலவை சாதத்துடன் சட்னி, துவையல் என ஏதேனும் வகையை சேர்த்து வழங்க அரசு முன்வர வேண்டும்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5முதல் 9 வயதுக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும், 10 முதல் -15 வயதுக்கு உட்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, சத்தான கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்படுகிறது.குறிப்பாக, ஒவ்வொரு வாரத்திற்கு ஏற்றாற்போல், மிளகு முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி, வெங்காய தக்காளி மசாலா முட்டையுடன் சாம்பார் சாதம், மிளகு முட்டையுடன் மீல் மேக்கர் மற்றும் வெஜிடபிள் ரைஸ், மிளகு முட்டையுடன் தக்காளி சாதம் தக்காளி மசாலா முட்டையுடன் புளி சாதம் என, பட்டியல் நீள்கிறது.அதன்படி, சத்துணவு உரிய நேரத்தில் வழங்கப்படுவது, போதிய அளவில் இருப்பதை உறுதி செய்வது, சுகாதாரம், சத்-துணவு அமைப்பாளர், உதவியாளர்களின் அணுகுமுறை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனித்தும் வருகின்றனர்.ஆனால், பல பள்ளிகளில், மாணவர்கள், சத்துணவை முழுமையாக உட்கொள்ளாமல், வீணாகக் கொட்டி விடுகின்றனர். சுவையில் குறைபாடு இருந்து, அதனை நிவர்த்தி செய்ய முற்பட்டாலும், மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர்.எனவே, சத்துணவுடன் ஏதேனும் சட்னி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.