செல்வமகள் திட்டத்தில் ரூ.4,522 கோடி டெபாசிட்
கோவை: செல்வமகள் திட்டம் துவங்கியதில் இருந்து, கடந்த ஜனவரி வரை, கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில், மொத்தம் ரூ.4,522 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளின் நலனுக்காக, மத்திய அரசு 2015ம் ஆண்டு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. திட்டக் கணக்குக்கு 8.2 சதவீத வட்டி, வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80 சி- படி, ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை, வரிச்சலுகை வழங்கப்படும். இத்திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில், கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பத்துார், திருப்பூர் ஆகிய அஞ்சல் கோட்டங்கள் அடங்கியுள்ளன.பெண் குழந்தைகள் பயனடையும் வகையில், வெள்ளிதோறும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் துவங்க, கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், சிறப்பு முகாம் நடக்கிறது. கிளை அஞ்சலகங்கள் தவிர, அனைத்து தபால் நிலையங்களிலும், திட்டக் கணக்கை துவங்கலாம்.திட்டம் துவங்கியதில் இருந்து இதுவரை, 8.1 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ரூ.4,522 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, மேற்கு மண்டல தபால்துறை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.