சிறப்பு கிராம சபை கூட்டத்தில் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
அன்னுார்; சிறப்பு கிராமசபை கூட்டத்தில், துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன்படி, காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி பேசுகையில், ''பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் தரப்படுகிறது. உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.கூட்டத்தில், ஊராட்சியில், குடிநீர் வினியோகம், சுகாதாரம், துாய்மைப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் மோட்டார் ஆபரேட்டர்கள் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.ஊராட்சி செயலர் நாச்சிமுத்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.