கோவை;பி.பி.ஜி., கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், மாணவ மாணவியர் அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றனர். பி.பி.ஜி., கல்வி குழுமம் சார்பில், 'பி.பி.ஜி., இன்டர் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்' என்ற பெயரில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், சரவணம்பட்டி பி.பி.ஜி., தொழில்நுட்ப வளாகத்தில், இரண்டு நாட்கள் நடந்தன. போட்டியை, பி.பி.ஜி., கல்லுாரி தாளாளர் சாந்தி, துணை தலைவர் அக்சய், செயல் இயக்குனர் அமுதகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு வாலிபால், கால்பந்து, மாணவியருக்கு த்ரோபால் மற்றும் கோகோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவியர் பிரிவு த்ரோபால் போட்டியில், பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் பள்ளி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. கோ கோ இறுதிப்போட்டியில், எம்.டி.என்., பள்ளி அணி 4 - 3 என்ற புள்ளிக்கணக்கில், டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணியை வீழ்த்தியது. மாணவர்கள் பிரிவு வாலிபால் போட்டியில், அகர்வால் பள்ளி அணி முதலிடம், ஏ.பி.சி., பள்ளி இரண்டாமிடம், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. கால்பந்து போட்டியில் விவேகம் பள்ளி அணி முதலிடம், விக்டரி வித்யாலயா இரண்டாமிடம், டாப்ஸ் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பி.பி.ஜி., குழும தலைவர் தங்கவேலு பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் மனோகரன் செய்திருந்தார்.