செய்யுளை மாற்றி எழுதிய மாணவனை அடித்ததாக பள்ளி ஆசிரியர் கைது
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ் பாடத்தில், புறநானுாறு செய்யுளை மாற்றி எழுதிய மாணவனை அடித்த ஆசிரியரை, மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில், 42 வயதானவர் தமிழாசிரியராக பணியாற்றுகிறார். வகுப்பறையில், கடந்த, 3ம் தேதி பிளஸ் 2 தமிழ்ப்பாட வகுப்பில், புறநானுாறு செய்யுளை பார்த்து அனைவரையும் நோட்டில் எழுதுமாறு கூறியுள்ளார்.அப்போது, ஒரு மாணவர் மட்டும், தவறுதலாக புரிந்து கொண்டு, வேறு செய்யுளை நோட்டில் எழுதியதாக கூறப்படுகிறது.இதை கவனித்த ஆசிரியர், மாணவரை கண்டித்து வேண்டுமென்று தவறாக எழுதினாயா என, அடித்ததாகவும், செருப்பை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கைது செய்தனர்.பள்ளி நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, 'மாணவர்கள், ஆசிரியரை கிண்டல் செய்ததால் கண்டித்துள்ளார். மேலும், செய்யுளையும் மாற்றி எழுதியதால் அடித்துள்ளார்,' என தெரிவிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட ஆசிரியரை, கோவை ஜே.எம். எண் 2 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முன் போலீசார்ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ஆசிரியரை ஜாமினில் விடுவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த மாணவர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றும் பெண் அதிகாரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.