குடிநீர் குழாயில் வந்தது சாக்கடை கழிவுநீர்!
கோவை : கோவை அம்மன்குளம் பகுதியில், குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.கோவை அம்மன்குளம் பகுதியில் ஜி.ஹெச். காலனி, அண்ணாநகர், ராஜிவ்நகர் மற்றும் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.அப்போது குடிநீர் செல்லும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்துள்ளது. இதனால் வீடுகளில் இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில், நீர் கருப்பு நிறமாகவும், துர்நாற்றத்துடனும் வருகிறது.இதை குடித்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதனால் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, சுத்தமான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.