தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல்; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைப் பகுதியில் உள்ள, தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, கூறியுள்ளதாவது:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி, மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், செயல்படும் அனைத்து விதமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிமக் கட்டணத்தை செலுத்தி, வியாபாரத்தை தடையின்றி நடத்தி வரலாம்.ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நகராட்சி அதிகாரிகள் நேரடி ஆய்வின் போது, உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்து வரும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். தொழில் உரிமத்தை வைத்திருப்பவர்கள், தமிழ்நாடு வணிகர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து, நிதியுதவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளையும் பெறலாம். தொழில் உரிமம் பெறுவதற்கு, இணையதளம் வாயிலாகவோ, நகராட்சி அலுவலகத்தின் வாயிலாகவோ, விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி, உரிமங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவை, அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என, நகராட்சி கமிஷனர் அறிக்கையில் கூறியுள்ளார்.