| ADDED : மே 13, 2024 11:40 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில்,'பயிரின் வளர்ச்சி என்பது அதன் மண்வளத்தை பொறுத்து அமைகிறது. காலநிலை மாற்றம், பருவம் தவறிய மழை, அதிகப்படியான ரசாயன உரங்களின் பயன்பாடு, நிலத்தடி நீர் வற்றி போகுதல் உள்ளிட்ட காரணங்களால் மண்வளம் நாளுக்கு நாள் குன்றி வருகிறது. மண் பரிசோதனை வாயிலாக, மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் ரசாயன உரங்களை இடவேண்டும். இதனால் உர செலவை கணிசமாக குறைக்க முடியும். ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. ஏக்கருக்கு குறைந்தது, 10 இடங்களில் எடுத்து, கலந்து, அதிலிருந்து கால் பங்கிட்ட முறையில் அரை கிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும். ஆங்கில எழுத்து 'வி' வடிவில் குறிப்பிட்ட ஆழத்துக்கு வெட்ட வேண்டும். குழியில் இரு பக்கங்களிலும், மேலிருந்து கீழ் வரை ஒரே சீராக அரை அங்குல கணத்தில் செதுக்க வேண்டும். மண் மாதிரிகள் பாலிதீன் பை அல்லது துணி பையில் போட வேண்டும். மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில், பயிருக்கு இட வேண்டிய சரியான உர அளவுகள் கொடுக்கப்படும். இதன் வாயிலாக உர செலவை சிக்கனப்படுத்தி, சாகுபடி செலவை குறைக்க முடியும்' என, வேளாண்துறையினர் குறிப்பிட்டனர்.