உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் சூடுபிடிக்கவில்லை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் சூடுபிடிக்கவில்லை

பெ.நா.பாளையம்: அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை துவங்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விகிதம் மந்தமான நிலையிலேயே உள்ளது.தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச், 1 முதல் தொடங்கப்பட வேண்டும் என, அந்தந்த பகுதி வட்டார கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வியை நிறைவு செய்யும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, அந்தந்த குடியிருப்புகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, சேர்க்கை பணிகளை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.குறிப்பாக, அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள், இணையதள வசதி, கையடைக்க கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழக அரசின் நல திட்டங்கள் உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதை பின்பற்றி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தற்போது அரசு பள்ளிகளில் தேர்வு காலம் என்பதால், அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் முதல் தேதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பெற்றோர்களிடையே பெரிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. ஏப்ரல், மே மாதங்களில் மாணவர் சேர்க்கை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும், பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, பொது மக்களிடையே பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ