உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எட்டு மாதமாக தீர்வு காணாத மாநகராட்சி

எட்டு மாதமாக தீர்வு காணாத மாநகராட்சி

கோவை:கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி, மனுக்களை பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார். துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சிவக்குமார், நகர் நல அலுவலர் (பொ) பூபதி முன்னிலை வகித்தனர். மொத்தம், 43 மனுக்கள் பெறப்பட்டன.

வாகன பழுது நீக்குங்க!

அதில், மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் கொடுத்த மனுவில், 'மாநகராட்சி மத்திய மண்டலத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு பணிமனை ஏற்படுத்த வேண்டும். பஞ்சர் உள்ளிட்ட பழுது ஏற்பட்டால், பழுது நீக்குவதற்கான பணத்தை டிரைவர்கள் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது. டிரைவர்களுக்கு சம்பள ரசீது, சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும். பழுதடைந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு மாற்று வாகனம் வழங்க வேண்டும். டிரைவர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., பணத்தை, அவர்களது கணக்கில் சேர்க்க வேண்டும். மாநகராட்சி வாகனங்களை சரி செய்து தர வேண்டும்' என, கூறியுள்ளனர்.

மாற்று இடம் கொடுங்க!

கோவை மாவட்ட பாதணி தயாரிப்பாளர் தொழிலாளர் நலச்சங்கத்தை சேர்ந்த ராஜ், சிவா ஆகியோர் கொடுத்த மனுவில், 'கதர் கிராம தொழில் வாரியத்தால் வழங்கப்பட்ட இரும்பு பெட்டி வைத்து, 50 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறோம். இதற்கு முன், அரசு மருத்துவமனை அருகில் இருந்தோம்; லங்கா கார்னர் ரயில்வே கீழ்மட்ட பாலம் வேலைக்காக எங்கள் கடைகள் அகற்றப்பட்டு, காந்திபுரம் பாரதியார் ரோட்டுக்கு மாற்றப்பட்டோம். அங்கிருந்து நஞ்சப்பா ரோடு மத்திய சிறை நுழைவாயில் அருகே வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது செம்மொழி பூங்கா வேலைகள் நடக்கிறது. எங்கள் கடைக்கு பாதிப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நிரந்தரமாக மாற்று இடம் வழங்கி, கடைகள் அமைக்க அனுமதி தர வேண்டும்' என கூறியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றுங்க!

திருமுருகன் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'கோவை மாநகராட்சி, 40வது வார்டில் உள்ள எங்களது குடியிருப்பில், 'ரிசர்வ் சைட்'டை ஆக்கிரமித்து, தனியார் கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது. அவ்விடம் பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது. சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அக்கட்டடத்தை இடித்து, அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சேர்த்து, பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்க வேண்டும். மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். ஆழ்குழாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்' என, கோரியுள்ளனர்.கடந்த ஜன., 2ம் தேதி நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமில் இதே மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. மனு எண்; 7181784. இதற்கு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. எட்டு மாதங்களாகி விட்டது; மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி, மீண்டும் மனு கொடுத்திருக்கின்றனர்.

அனுமதி கேட்கிறது விஜய் கட்சி!

தமிழக வெற்றிக் கழகம் கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சரவணக்குமார் கொடுத்த மனுவில், 'கோவை மாவட்டம் முழுவதும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். சிங்காநல்லுார் தொகுதியில் ஏற்கனவே அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ள பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் 18 இடங்களில் அமைக்க, மாநகராட்சியின் தடையின்மை சான்று மற்றும் அனுமதி வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ