பசி போக்குவதே முதல் வழிபாடு
அன்னூர்: அன்னூர் அருகே அல்லி குளத்தில் செயல்பட்டு வரும், வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில், அணையா விளக்கு எனப்படும், சத்திய ஞானதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில், வள்ளலார் அருளிய திருவருட்பா பாராயணம் செய்யப்பட்டது. சன்மார்க்க சங்க கொடி ஏற்றப்பட்டது. மதியம் அணையா விளக்கு என்னும், சத்திய ஞானதீபம் ஏற்றப்பட்டது.தீபத்தை ஏற்றி, தஞ்சாவூர் சமரச சுத்த சன்மார்க்க சங்க நிர்வாகி ரங்கநாதன் பேசுகையில், '' பசித்தோர்க்கு பசி போக்குவதே முதல் வழிபாடு என்றார் வள்ளலார். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரிடமும் கருணையாய் இருக்க வேண்டும். பிரபஞ்சத்திற்கு நாம் என்ன தருகிறோமோ, பிரபஞ்சம் அதை பல மடங்கு நமக்கு திருப்பித் தரும். அன்பை கொடுத்தால் பல மடங்கு அன்பு கிடைக்கும். ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல்,'' என்றார்.கோவை, சேலம் பகுதியில் இருந்து சன்மார்க்க சங்கத்தினர் பங்கேற்றனர்.