மதுக்கூடாரமாக மாறும் மேம்பால பகுதி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி மது கூடாரமாக மாறி வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள ரோட்டில், நாள் தோறும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இப்பகுதியில், தனியார் நிறுவனங்களும் அமைந்துள்ளன.இவ்வழியில் செல்லும் சிலர், இரவு நேரத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே மற்றும் மேம்பாலம் கீழ்பகுதியில் அமர்ந்து மது அருந்திவிட்டு, காலி மது பாட்டில்களை ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர்.மேலும், காலியான உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவை இப்பகுதியில் போட்டுச்செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், இவ்வழியில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடனும், அச்சத்துடனும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இப்பகுதியில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.