உள்ளூர் செய்திகள்

இளநீர் விலை எகிறுது

கோவை; கோவையில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், இளநீர் மற்றும் தேங்காய் விற்பனை மட்டுமின்றி விலையும் உயர்ந்துள்ளது.தற்போது பகல் நேர வெப்பநிலை, 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 24-25 டிகிரி செல்சியஸ் அளவிலும் பதிவாகியுள்ளது.வெப்பம் அதிகரிக்கும் நிலையில், பழச்சாறு, கம்பங்கூழ், பழங்கள், நொங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களில் இளநீர் 35-40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, சில இடங்களில் ஒரு இளநீர் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை அதிகரித்தாலும், வெயில் காரணமாக, விற்பனையும் அதிகரித்தே உள்ளது.தேங்காய் வியாபாரி ராஜன் கூறுகையில், ''முற்றிய தேங்காய் ஒரு கிலோ 63 ரூபாய்க்கும் இளம் தேங்காய் ஒரு கிலோ 61 ரூபாய்க்கும் தோட்டத்தில் இருந்து பெறுகிறோம். இளநீர் ஒரு கிலோ 16 ரூபாய்க்கு பெறுகிறோம். சுமைக்கூலியுடன் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.ஒரு தேங்காய், ஒரு இளநீர் என்பது அதன் எடை, தரத்தை பொறுத்து விலை மாறுபடும். இளநீர் ஒன்று, 45-50 ரூபாய் வரை விற்பனையாகிறது,'' என்றார்.விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி கூறுகையில், ''தேங்காய், இளநீர் விலை சற்று அதிகரித்துள்ளது. வெயில் காரணமாக இளநீர் அதிகம் தேவையுள்ளது. ஒரு தேங்காய் 30-35 ரூபாய்க்கும், இளநீர், 40 முதல் 50 ரூபாய் வரையும் தரம் மற்றும் விற்பனை செய்யும் இடம் பொறுத்து விற்கப்படுகிறது, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ