| ADDED : ஜூலை 17, 2024 12:43 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பள்ளி மோசமான நிலையில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி அருகே, நல்லுார் ஊராட்சியில் கடந்த, 1953ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. ஓடுகளால் வேயப்பட்ட ஒரு கட்டடத்தில் தொடக்கப் பள்ளியில், 29 மாணவர்கள் படிக்கின்றனர்.இப்பள்ளியில் மழைக்காலத்தில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திவ்யா மற்றும் பெற்றோர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், நல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. பழமையான ஓட்டு கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளியில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலங்களில் மழைநீர் புகுந்து வருகிறது. இதனால், மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் ஏற்படுகிறது.இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெற்றோர் கூறுகையில், 'பள்ளி கட்டடம் மோசமாக உள்ளது. கட்டடத்தின் சுவர்களை தொட்டால் 'ஷாக்' அடிக்குது. பாதுகாப்பில்லாத கட்டடத்தில் மாணவர்கள் கல்வி பயில வேண்டிய சூழல் உள்ளது.மாணவர்கள் கல்வி பயில, உணவு உட்கொள்ள வசதிகள் ஏதும் இல்லை. கட்டடத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.