தொடு முறை போட்டியில் தடுத்த மாணவர்கள் சிலம்பத்தில் அபாரம்
கோவை : கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை, சிலம்பம் தொடு முறை போட்டி, விறுவிறுப்பாக நடந்தது.'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் முடிவடைந்த நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று துவங்கின. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் சிலம்பம், செஸ், கேரம் போட்டிகள் இரு நாட்கள் நடக்கின்றன.சிலம்பம் போட்டிக்கு, 700 மாணவ, மாணவியர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். தொடு முறை போட்டி மட்டுமே இடம்பெறும் நிலையில் மாணவர்களுக்கு, 45-55 கிலோ, 55-65, 65-75 மற்றும், 75 கிலோவுக்கு மேல் என, நான்கு பிரிவுகளில் சிலம்பம் நடக்கிறது.மாணவியர் பிரிவில், 42-52 கிலோ, 52-62, 62-72 மற்றும், 72 கிலோவுக்கும் அதிகமான என நான்கு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன. இதில், மாணவர்களுக்கான, 75 கிலோவுக்கும் அதிகமான பிரிவில், இந்துஸ்தான் கல்லுாரி மாணவர் குலாம் அகமது முதலிடம் பிடித்தார்.சி.ஐ.டி., கல்லுாரி மாணவர் சிவனேஸ் இரண்டாம் இடமும், கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர் பரணிதரன் மூன்றாம் இடமும் பிடித்து, கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மாணவியருக்கான, 72 கிலோ பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி மோதிகா முதலிடம் பிடித்தார்.குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி மாணவி நித்யாஸ்ரீ இரண்டாம் இடமும், கற்பகம் கல்லுாரி மாணவி விஸ்வஸ்ரீ மூன்றாம் இடமும் பிடித்து, கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். செஸ் போட்டியில் அசத்தல்
செஸ் போட்டிக்கு இணையதளத்தில் வீரர், வீராங்கனைகள், 690 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் வீரர்கள், 164 பேர், வீராங்கனைகள், 62 பேர் நேற்று போட்டியில் பங்கேற்றனர். மொத்தம், 7 சுற்றுகள் இடம்பெறும் நிலையில், நேற்று நான்கு சுற்றுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது சுற்றின் முடிவில், வீராங்கனைகள், 16 பேர் தலா இரண்டு புள்ளிகளுடனும், வீரர்கள், 30 பேர் தலா இரண்டு புள்ளிகளுடனும், களத்தில் இருந்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.