உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு இல்லை

பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு இல்லை

மேட்டுப்பாளையம்;கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழக அரசு ஊராட்சிகளில் பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்காததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கும் ஏழை எளிய மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்க கோரியும், கோரிக்கை மனு கொடுப்பது வழக்கம். இதன் அடிப்படையில் பசுமை வீடுகள் கட்ட, ஊராட்சிகளில் பயணாளிகள் பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட நிர்வாகம் நிதி ஆதாரம் உள்ளதை அடுத்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பசுமை வீடுகளை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, பசுமை வீடுகள் கட்ட, இதுவரை நிதி ஏதும் ஒதுக்கவில்லை. வீடுகளும் கட்டி கொடுக்கவில்லை.இதனால் வீடுகள் கேட்டு காத்திருக்கும் ஏராளமான மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து ஊராட்சித் தலைவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில், ஏழை, எளிய மக்களுக்கு, தொகுப்பு வீடுகள், கான்கிரீட் வீடுகள், பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதை அடுத்து வந்த தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், வீடுகள் கட்டிக் கொடுக்க கோரி, ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் 'கலைஞர் கனவு இல்லம் ' என்ற புதிய திட்டத்தை அறிவித்து, 3.50 லட்சம் ரூபாய் செலவில் பசுமை வீடு கட்டிக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெறும், அறிவிப்பாகவே உள்ளது. செயல் வடிவில் நடைமுறைக்கு வரவில்லை. இந்த திட்டத்தை நடைமுறை படுத்த, பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் ஊராட்சிகளுக்கு வழங்கவில்லை. மனு கொடுத்த மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே தமிழக அரசு, விரைவில் திட்டம் குறித்து அறிவிப்பும், வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும். இவ்வாறு ஊராட்சித் தலைவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !