உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்தி ரோட்டில் உயர் மட்ட பாலம் கிடையாது! * சாலை மட்டும் அகலப்படுத்தப்படவுள்ளது

சத்தி ரோட்டில் உயர் மட்ட பாலம் கிடையாது! * சாலை மட்டும் அகலப்படுத்தப்படவுள்ளது

-நமது நிருபர்-சத்தி ரோட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை, இருக்கும் இடத்தை வைத்து, ரோட்டை அகலப்படுத்த முடிவு செய்துள்ளது.கோவை நகரிலுள்ள முக்கிய ரோடுகளில், சத்தி ரோடுதான் மிகக்குறுகலாகவும், அதிக போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் ரோடாகவும் உள்ளது. கோவை-பெங்களூரு இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் (என்.எச்.948) ஒரு பகுதியாகவுள்ள இந்த ரோட்டின் வழியாகவே, சத்தி, பண்ணாரி, ஊட்டி மற்றும் பெங்களூரு, மைசூருக்கு வாகனங்கள் செல்கின்றன.இதன் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன. இதற்குத் தீர்வு காண்பதற்கு, இந்த ரோட்டில், 'மெட்ரோ ரயில்' இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கோவையில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில், சத்தி ரோட்டில் 16 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ தடம், உயர் மட்டப்பாதையாக அமைக்கப்படும் என்று விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பே, 2021-2022 நிதியாண்டில், தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை, இந்த ரோட்டில் பாலம் கட்டுவதற்கு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது.அந்த ஆண்டில், தமிழகத்தில் 28 பணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கன்சல்டன்ஸியை நியமிக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதில், இந்தப் பணியும் இடம் பெற்றிருந்தது. டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து, 2.4 கி.மீ., துாரத்துக்கு (கி.மீ.,163/8-166/2 ) உயர்மட்ட மேம்பாலம் கட்டவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.திட்ட அறிக்கை தயாராகும் முன்பே, சத்தி ரோட்டில் மெட்ரோ ரயில் தடம் வருவதாக, தமிழக அரசு திட்ட அறிக்கையை வெளியிட்டது. சத்தி ரோட்டில் அமையும் பாலத்தையொட்டி, இதற்கான தனியாக உயர் மட்ட வழித்தடம் அமைக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த பாலம் கட்டும் திட்டத்தையே, தேசிய நெடுஞ்சாலைத்துறை கைவிட்டுள்ளது.பாலம் கட்டுவதற்குப் பதிலாக, டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து புரோசோன் மால் வரையிலான 3.4 கி.மீ., துாரத்துக்கு, தற்போதுள்ள ரோட்டையே விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் பல பகுதிகளில், நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு விட்ட நிலையில், கணபதி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சில இடங்கள்தான் குறுகலாகவுள்ளன.அந்த இடங்களில் மட்டும், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு இருக்கும் இடத்தை வைத்து, ரோட்டை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு, வருடாந்திர திட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்திடம் ஒப்புதல் பெற்று, மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருவதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏற்கனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கு புறவழிச்சாலைப் பணி நடந்து வருவதுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கிழக்குப் புறவழிச்சாலையும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து, குரும்பபாளையம் முதல் கர்நாடகா எல்லை வரையிலும், 92 கி.மீ., துாரத்துக்கு 1912 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.இந்த ரோடுகள் அமையும்போது, கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறையும் என்பதால், பாலம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, ரோடு விரிவாக்கத்துக்கு திட்டமிட்டுள்ளதாக, இன்ஜினியர்கள் காரணம் தெரிவிக்கின்றனர். எதைச் செய்தாலும் காகிதத்தில் மட்டுமே திட்டம் தீட்டிக் கொண்டிருக்காமல், விரைவாகச் செய்ய வேண்டுமென்பதே, கோவை மக்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Damodara Ramanuja Dasan
ஜூன் 26, 2024 08:37

திமுக அரசு கோவை யை வஞ்சிக்கிறது


Kundalakesi
ஜூன் 26, 2024 04:34

கோவை நகரின் மேல் அரசிற்கு கோபம். அதனால் முற்றிலுமாக புறக்கணிப்பு செய்கிறது.


புதிய வீடியோ