கோவை : பிளஸ்2 தேர்வுகள் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக என்ன படிக்கலாம்; எந்த கல்லுாரியில் படிக்கலாம் என்பதே, மாணவ மாணவியர் மற்றும் பெற்றோரின் கேள்வியாக உள்ளது. இந்த குழப்பத்துக்கு தீர்வு தரும் வகையில், தினமலர் நாளிதழ் நடத்தும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவையில் நடந்தது.கோவை அவிநாசி சாலையில் உள்ள, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. 'தினமலர்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் இணைந்து நடத்துகின்றன.வழிகாட்டி நிகழ்ச்சி, கருத்தரங்கு, கண்காட்சி ஆகிய இரு பிரிவுகளாக காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை நடைபெறுகிறது. கருத்தரங்குகளில் காலை, மாலை, இரண்டு வேளையும் 20க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பேசவுள்ளனர். கண்காட்சியில், 130க்கும் மேற்பட்ட முன்னணி கல்லுாரிகள் சார்பில், ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லுாரி சேர்க்கை செயல்பாடுகள், கட்டண விபரம், விடுதி வசதிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். கருத்தரங்குகளில் விளக்கம்
கருத்தரங்கில், 'நீங்களும் சாதனையாளர் ஆகலாம்' என்ற தலைப்பில், ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, 'வேளாண் படிப்புகளும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 'ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்' என்ற தலைப்பில், கல்வியாளர் நெடுஞ்செழியன், 'கரியர் கவுன்சிலிங்' என்ற தலைப்பில் கல்வியாளர் அஸ்வின், வேலைவாய்ப்பு திறன் குறித்து, ஜோஹோ நிறுவன அதிகாரிசார்லஸ் காட்வின், சி.ஏ., படிப்புகளின் எதிர்காலம் குறித்து நிபுணர் ராஜேந்திரகுமார், எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் குறித்து நிபுணர் செந்தில்ராஜாஉள்ளிட்ட, பல வல்லுநர்கள் பேசவுள்ளனர்.இதை தவிர்த்து, பொறியியல், மருத்துவம், நுழைவுத்தேர்வுகள், கவுன்சிலிங் நடைமுறை, தொழில் முனைவோர் வாய்ப்பு, வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ள டாப் துறைகள், படிக்கும் போது வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து, அந்தந்த துறை வல்லுநர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். ஏ.ஐ., டிரோன், சைபர் செக்யூரிட்டி!
பொறியியல் பிரிவுகளின் கீழ் டிரெண்டில் உள்ள டிரோன் இயக்கம், ஏ.ஐ. எம்.எல்., ஐ.ஓ.டி., பிளாக்சைன், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும், வல்லுநர்கள் பேசவுள்ளனர். முதல் மதிப்பெண் மாணவர்களுக்கு, மட்டுமின்றி சராசரி மற்றும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் குறித்தும், கல்லுாரி தேர்வுகள் குறித்தும், இதில் அறிந்து கொள்ள முடியும். பிளஸ்2 மட்டுமின்றி, பிளஸ்1 மாணவர்களும் இதில் பங்கேற்று அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வல்லுநர்களிடம் மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கேள்விகள் எழுப்பி சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில், பிள்ளைகளின் எதிர்காலத்தை திட்டமிடலாம்.இந்த இலவச, அரிய வாய்ப்பு, வேறு எங்கும் கிடைக்காது என்பதால், தவற விடாதீர்கள் பெற்றோர்களே!
கருத்தரங்கில் இன்றைய தலைப்புகள்
எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் கலை அறிவியல் பிரிவுகளில் வாய்ப்புகள் நீங்களும் சாதனையாளர் ஆகலாம் ஐ.ஐ.டி., சென்னையில் கல்வி மற்றும் சேர்க்கை எப்படி? ஏ.ஐ., ஐ.டி., டேட்டா சயின்ஸ், சி.எஸ்., படிப்புகளுக்கான எதிர்காலம் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் எவை?
'வழிகாட்டியில்' இணையும் கரங்கள்
நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி இணை ஸ்பான்சர்களாகவும், கற்பகம் கல்வி நிறுவனம், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி,கே.எம்.சி.எச்., என்.ஜி.பி கல்வி நிறுவனங்கள், சேரன் கல்விக்குழுமம், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், ரத்தினம் கல்விக்குழுமம், ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி, ஸ்பான்சர்களாகவும் தினமலர் நாளிதழுடன் கரம் கோர்க்கின்றன.
பரிசுகளும்!
அவிநாசி சாலையில் இருந்து, நிகழ்ச்சி நடக்கும் கொடிசியா வளாகத்திற்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். கருத்தரங்கில் கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு விடையளித்து, லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளை மாணவ, மாணவியர் தட்டிச்செல்லலாம்.