உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கோவை புறநகரில் துாள் வியாபாரம் :நட்பாக பழகி போதைக்கு அடிமையாக்கும் கும்பல்

கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கோவை புறநகரில் துாள் வியாபாரம் :நட்பாக பழகி போதைக்கு அடிமையாக்கும் கும்பல்

சூலுார்:கோவை புறநகரில் கஞ்சா என்ற 'துாள்' வியாபாரம் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து நடத்தப்படுவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களிடம் நட்பாக பழகி போதைக்கு அடிமையாக்கும் கும்பலை களையெடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கோவை புறநகரில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் கல்லுாரி மாணவர்கள் என்ற போர்வையில் தங்கியிருப்பவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் கஞ்சா, போதை ஊசி, மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களும் சிக்கின. இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரிடம் சிக்கிய கஞ்சா கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதுபற்றிய விவரம் வருமாறு:ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து ரயில்கள், பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி வரப்படுகிறது. தனி நெட்ஒர்க் அமைத்தும், வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்தும் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா தூள் விற்கப்படுகிறது. குறிப்பாக கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., பணியில் உள்ள இளைஞர்கள் தங்கி உள்ள இடத்துக்கு அருகில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது.

நட்பை வளர்த்து

புகைபிடிப்பது என்பது தற்போது, இளைய தலைமுறையிடத்தில் பேஷனாகி விட்டது. மது போதைக்கு அடிமையாகி உள்ள இளைஞர்கள், தற்போது, புகையிலும் போதையை தேடுகின்றனர். இதுபோன்ற, இளைஞர்கள், கல்லுாரி மாணவர்களுடன் சிறிது சிறிதாக நட்பை வளர்த்துக் கொள்ளும் கஞ்சா கும்பலை சேர்ந்த நபர்கள், மாணவர்களுக்கு போதையின் பாதை காட்டி, தங்கள் வலைக்குள் விழ வைக்கின்றனர். அதன் பின், அம்மாணவர்களின் வாட்ஸ் அப் குழுக்களில் சேர்ந்து, கஞ்சா, மற்றும் உயர் ரக போதை பொருட்களை சப்ளை செய்கின்றனர்.போதைக்கு அடிமையாகிய மாணவர்கள், ஒரு கட்டத்தில் கஞ்சாவுக்காக, சமூக விரோத கும்பலின் சொல்படி நடக்க துவங்குகின்றனர். கல்லுாரிக்குள்ளும் கேங் சேர்ந்து கொண்டு சுற்றுவது, தன்னை தாதாவாக காண்பித்துக்கொள்ளும் வகையில் அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட துவங்குகின்றனர். இதனால், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை உருவாகி வருகிறது.

பொட்டலம், சாக்லெட்

கஞ்சா கும்பல் விற்பனைக்கு ஏதுவாக, கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக்கி, விற்கின்றனர். மேலும், சாக்லெட்டுகளில் கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் எசன்ஸ்சை கலந்து விற்கின்றனர். இடத்துக்கு தகுந்தாற்போல், விலையை நிர்ணயம் செய்து விற்கின்றனர். 10 கிராம் கஞ்சா பாக்கெட்டை, 300 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்று பணத்தை குவிக்கின்றனர்.தேனி மாவட்டத்தில் கஞ்சா பயிரிடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், ஆந்திரா மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்துதான் அதிகளவு கஞ்சா தமிழகத்துக்குள் வருகிறது. கஞ்சா சாக்லெட்டுகள் வடநாட்டில் தயாரிக்கப்பட்டு இங்கு வருகிறது.

போலீஸ் நடவடிக்கை

போலீசார் தீவிர வேட்டையாடி ஒரு கஞ்சா கும்பலை பிடித்து சிறையில் அடைத்தாலும், சில நாட்களில் வேறு கும்பல் களம் இறங்குகிறது. கடந்த, எட்டு ஆண்டுகளில், புறநகர் பகுதிகளில் மட்டும், ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது, கஞ்சா கும்பல்-மாணவர்கள் தொடர்பு அதிகரித்து வருவதால், போலீசார், அதிரடி ரெய்டு நடத்த துவங்கியுள்ளனர். மாணவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கும்பலை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன் தினம் நடந்த முதல் கட்ட ரெய்டில் ஆயுதங்களும் பிடிபட்டதால், இப்பிரச்னையில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர்.

ரெய்டு தொடரும்...

மாணவர்களுடன் தொடர்புடைய சமூக விரோத கும்பலை அடையாளம் காண, போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். கல்லுாரி மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரமாக்கி உள்ளனர். மாணவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர்களிடத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றால் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர். கல்லுாரிகள் அதிகம் உள்ள பகுதிகளில் திடீர் ரெய்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை