பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்தணும்! தொழில்வர்த்தக சபை சார்பில் அரசுக்கு அழுத்தம்
பொள்ளாச்சி:''பொள்ளாச்சியில், சுற்றுலா வளர்ச்சி மையத்தின் தகவல் மையம் அமைக்க வேண்டும்,'' என, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், சுற்றுலாத்துறை, செய்தித்துறை, வீட்டுவசதித்துறை அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியின் பசுமை மற்றும் அழகான இடங்களை பார்வையிட, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மத்திய அரசின் சுற்றுலா துறை அமைச்சகம், கிராமம், கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக, 35 அழகிய கிராமங்களில் தேர்வு செய்ததில், பொள்ளாச்சி அருகேயுள்ள வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியும் ஒன்றாகும்.பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதில், கடந்த, 10 ஆண்டுகளாக சர்வேதச பலுான் திருவிழா நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும், நான்கு நாட்கள், ஜன., மாதத்தில் நடக்கிறது.இந்தாண்டு, இவ்விழாவை ஒரு வாரம் நடத்தும் வகையில், மூன்று நாள் பட்டம் விடும் திருவிழாவை சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை, தொழில் சங்கம், பாரம்பரியம், கலாசாரம், இயற்கையை வெளிப்படுத்தும் வகையில், டிச., மாதம் பொள்ளாச்சி திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான அனுமதி மற்றும் ஒத்துழைப்பு வழங்க அரசு முன்வர வேண்டும்.பொள்ளாச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின், தகவல் மையம் அமைக்க வேண்டும். இதன் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு பயனாக இருக்கும்.மேலும், பொள்ளாச்சியின் பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்து, பிரசாரம் செய்து அதை சுற்றுலா தலமாக மாற்ற தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக பொள்ளாச்சியை மாற்றிட தொழில்வர்த்தக சபை வாயிலாக முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இந்த முயற்சிகளுக்கு அரசு உதவினால் பயனாக இருக்கும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.